கொரோனா ஊரடங்கு காரணமாக தோல், கைவினை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் வாணியம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் ஏராளமான தோல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களும் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பர்ஸ், வேலட் , பெல்ட், சு உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக தோல் கைவினைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகளின் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது எனவும், இதனால் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தோல் கைவினைப் பொருள் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.