பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவில் சிக்கி தவித்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த 101 மருத்துவ மாணவ மாணவிகள் சென்னை திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளார்.
மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. விமானத்தில் பயணித்த மாணவ மாணவிகள் அனைவரும் சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தபோது சோனு சூட் உருவப்படத்தை பிடித்தபடி அவருக்கு நன்றி சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.