Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியில் கேப்டனுக்கு முக்கியத்துவம் குறைவு – ரோஹித் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான ரோகித் சர்மா அணியின் கேப்டன் என்பவர் அந்த அணியின் மிகக்குறைந்த முக்கியத்துவம் கொண்டவரே என்று கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இப்பொழுது, செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரும், அணியின் துணை கேப்டனுமாக விளங்கும் ரோகித் சர்மா, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நீங்கள் அணியின் கேப்டனாக இருக்கும்போது, ​​நீங்கள் அந்த அணியின் மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்ற கோட்பாட்டை நான் நம்புகிறேன். பெரிய விஷயங்களில் மற்றவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். மேலும் இது வெவ்வேறு கேப்டன்களுக்கு வித்தியாசமாக செயல்படுகிறது, ஆனால் என்னைப் பொருத்தவரை, இந்த கோட்பாடு எனக்கு வேலை செய்கிறது. எனெனில் அணியின் கேப்டன் என்பவர் தனது அணியினரை சார்ந்தே அனைத்து முடிவுகளையும் செயல்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்த பழகுவது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் அது உங்களுடைய வழிநடத்தும் திறனின் அங்கமாகும்” என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேசிய ரோகித், “இந்த வாரம் உடற்பயிற்சி நிலையம் திறக்கப்படும் என்று நம்புகிறேன். அதனால் இனி நான் எனது பயிற்சிகளை தொடங்கலாம். இருப்பினும் தற்போது பருவமழை காரணமாக, வெளியே சென்று பயிற்சியை தொடங்குவது கடினமாக இருக்கும். அதனால் நான் உள்ளரங்கு பயிற்சிகளை மேற்கொள்வது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன்”என்று கூறியுள்ளார். மேலும் இந்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ரோகித் சர்மா, “என் வாழ்நாளில் நான் இவ்வளவு காலம் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்ததில்லை. அதனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எங்களுக்கு தற்போது அதற்கான நேரமும் உள்ளது. அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் துபாயில் நடைபெறவுள்ளதால், அங்கு நிலவும் வெப்பத்தில் விளையாடுவதும் கடினமான ஒன்று தான்” என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |