கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முதல் முழு ஊரடங்கு தொடங்கப்பட்டதிலிருந்தே அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் டி.வி. சேனல்கள் மூலமாக பாடம் நடத்துவது போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பரவி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் பாதிப்பு கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் சென்னையில் சில நாட்களாக அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வரும் நிலையில், தற்போது பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை நடைபெற்று வந்தது. இதற்கு இடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது சம்பந்தமாக பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை, அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் பள்ளிகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் எனவும், குடிநீர், மற்றும் கழிப்பிட வசதிகளை சரியாக செய்யவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தத் தகவலின்் அடிப்படையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் எனவும் அந்த தகவலில் தெரிவித்துள்ளது.