இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது, மற்றும் மதரீதியாக தூண்டிவிடுவது போன்றவற்றை பாகிஸ்தான் செய்யக்கூடாது என வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தை அடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானபணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அன்று பூமி பூஜை விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இது குறித்த அறிக்கை ஒன்றை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ” அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தது குறைபாடு உடையது. நீதியை விட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. பெரும்பான்மையானவரின் ஆதிக்கம் இந்தியாவில் மேலோங்கி, சிறுபான்மையரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் பலப்பட்டு வருகின்றன” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா நிருபர்களிடம் கூறுகையில்,” இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் கொடுப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது, மதரீதியாக தூண்டிவிடுவது, இது போன்றவற்றை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்” என அவர் கூறினார்.