கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் இருப்பதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக செயல்பட்டு வரும் இஸ்ரேலில் தடுப்பூசி உருவாகும் முயற்சியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை அறிய ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், தனது அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஐஐபிஆர்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தார். அங்கு அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை சந்தித்து பேசியுள்ளார்.
அதன் பிறகு பேராசிரியர் ஷபிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் இருக்கின்றது. அது குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் கடந்து செல்வதற்கு சில ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. இலையுதிர் காலம் விடுமுறைக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை நாங்கள் ஆரம்பிப்போம்” என்று கூறினார். இதுபற்றி ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறுகையில், “இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கி இருக்கின்ற தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை இலையுதிர்கால விடுமுறைக்கு பிறகு தொடங்கும்” என கூறியுள்ளார்.