ராணுவ அமைச்சகம் சீனா அத்துமீறி நுழைந்து விட்டதை ஒப்புக் கொள்ளும் பொழுது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதாவது இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாகவும், இதனை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ அமைச்சகம் கொடுத்துள்ள தகவல்களை மேற்கோளிட்டு காட்டியுள்ளார். அதில், லடாக் எல்லையில் குக்ராங் நலா, கோக்ரா, பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரை பகுதிகளில் சென்ற மே மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாக ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த தகவலை அவர் வெளியிட்டுள்ள பதிவோடு சேர்த்துள்ளார். அதை சுட்டிக்காட்டி, ” சீனாவின் அத்துமீறலை ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொள்ளும் பொழுது பிரதமர் மோடி மட்டும் ஏன் பொய் சொல்கிறார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.