பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் அரகெரே பகுதியில் நாகபூஷண் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருடைய நண்பருக்கு அந்த பணம் செல்லவில்லை. உடனடியாக நாகபூஷண் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணையதளத்தில் தேடி, கூகுள் பே வாடிக்கையாளர் சேவையகத்திற்கு தொடர்பு கொண்டு, தன்னுடைய நண்பருக்கு அனுப்பிய 300 ரூபாய் பணம் அவருக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
அப்போது சேவை மைய வாடிக்கையாளர் அதிகாரி, நீங்கள் அனுப்பிய பணம் திரும்ப கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து நாகபூஷண், தொடர்புகொண்ட எண்ணிற்கு தனது வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி இருக்கிறார். அவர் அனுப்பிய சில மணித்துளிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனைக் கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பிறகு சைபர் கிரைமில் ஈடுபட்டு வந்த நபர்கள் போலி =டிக்கையாளர் சேவை மைய எண்களை இணைய தளத்தில் பதிவிட்டு நாகபூஷணிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றிய தகவல் வெளிவந்தது. இதுபற்றி தெற்கு மண்டல சைபர்கிரைம் காவல் நிலையத்தில் நாகபூஷண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.