எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், IIT, IIM, NIT மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி நமது பழைய கல்வி திட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை என குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கும் போது எல்லாவற்றையும் ஆலோசித்தாக தெரிவித்த அவர் மாணவர்களை உலகத்தரத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வீட்டில் பேசும் மொழியிலேயே கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி கற்று தர வேண்டும் என்பதும் இந்த கல்விக் கொள்கையில் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கல்வி கற்க, கேள்வி கேட்க ஊக்குவிப்பதாக இந்த கல்வி கொள்கை அமையும் என்றும் மாணவர்களின் அறிவும், ஆர்வமும் இதன் மூலம் அதிகம் அதிகரிக்கும் என தெரிவித்த அவர் இடையில் கல்வியை விட்டவர்கள் மீண்டும் தொடர இந்த புதிய கல்விக் கொள்கை வழி வகுப்பதாக குறிப்பிட்டார். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் சமுதாயத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாட்டை இந்த கல்விக் கொள்கை களையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். எப்படி உழைக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை கற்றுத்தரும் எனவும், சாமானியர்களுக்கு குறைந்த செலவில் உயர் தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் வகையில் இந்த கல்விக் கொள்கை அமையும் என்று தெரிவித்த மோடி வருங்கால சந்ததியினருக்கு இந்த கல்விக் கொள்கை உபயோகமாக இருக்கும் என்றும் கூறினார்.
இறுதியில் புதிய கல்விக் கொள்கைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இதனிடையே புதிய கல்வி கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை மாற்றியமைக்க 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் குழு 484 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.