கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவ்விபத்தில் விமானி, குழந்தை உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
அப்போது சம்பவ இடத்துக்கு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், ஐஜி அசோக் யாதவ் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பிரதமரிடம் கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல 170பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 123 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.