மயிலாடுதுறையை சார்ந்த ஒரு குடும்பத்தில் வளரும் ஒரு நாய் அதனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருஇந்தளுர் பகுதியில் வசிப்பவர்கள் பிலோமினாமேரி – அலெக்ஸாண்டர் தம்பதியினர். 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினரின் குடும்பத்தில், தாயைப் பிரிந்த நாய்க்குட்டி ஒன்று வந்து சேர்ந்துள்ளது. அந்த நாய்க்கு அப்புக்குட்டி எனப் பெயரிட்டு, தங்களது முதல் குழந்தையைப்போல் அவர்கள் அன்பு காட்டி வளர்த்து வருகின்றனர். அப்புகுட்டி, அதன் தனிப்பட்ட குணாதிசயங்களால் தற்போது அப்பகுதியின் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த நாயின் தனித்திறமை என்னவென்றால், ஒரு கூடையைக் கொடுத்து கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிவரச் சொல்லி அதில் சீட்டு எழுதி போட்டால், கூடையை வாயில் கவ்விக் கொண்டு, கடைக்குச் சென்று தேவையான பொருள்களை எல்லாம் வாங்கி வந்துவிடுகிறது இந்த அப்புக்குட்டி.
மேலும், பிலோமினாமேரியிடம் அடம்பிடித்து, ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச்சென்று, வெண்ணிலா ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிடும் இந்த அப்புக்குட்டி, மதிய வேளையில் பிரியாணி மட்டுமே உண்கிறதாம். மேலும் மாலை வேளையில் ஸ்கூட்டியின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது இந்த அப்புக்குட்டியின் அன்புக் கட்டளையாம். தன்னை வளர்ப்பவர்கள் அளிக்கும் உணவை தவிர, வெளியாட்கள் கொடுக்கும் உணவு எதையும் உண்பதில்லையாம். மேலும் வீட்டிற்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காமல், ஒரு வளர்ப்பு மகனைப்போல் உலா வந்து கொண்டு அந்த குடும்பத்தோடு ஒன்றிவிட்ட அப்புக்குட்டியை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.