லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு விசாரித்தபோது, திருவண்ணாமலையில் இருந்து இந்த மாணவிகள் இ-பாஸ் இல்லாமல் திருப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, முறையாக இ-பாஸ் விண்ணப்பித்தவர்கள் அதனை பெறமுடியாத நிலையில் புரோக்கர்கள் மூலமாக 500 முதல் 2,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகளை வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டு இந்த காலத்திலும் இந்த ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் அரசு ஊழியர்கள் செயல்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கிறார்கள்.
அதேபோல நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்டு இருக்கும் மாணவிகளை குழந்தைகள் நல குழுக்கள் மூலமாக அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட, நீதிபதிகள் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என காவல்துறைக்கும், தொழிலாளர் நலத்துறைக்கு, மாவட்ட குழந்தைகள் நல குழுக்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.