சேலத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் நேற்று சூரமங்கலத்தில் உள்ள ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர், சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபுவிடம் சென்று, சாலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது தவறு என்று கூறியுள்ளார்.
இதனால் சுரேஷ்பாபு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுரேஷ்பாபு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரை தாக்கிவிட்டு தப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகர் உடனே சூரமங்கலம் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். பின்னர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கைது தாக்கிய சுரேஷ்பாபுவின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.