இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று தனியாக பிரத்யேகமாக 1098 என்ற சிறப்பு உதவி எண்கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த உதவி எண் நாடு முழுவதுமுள்ள 579 மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.. இந்தநிலையில், 1098 உதவி எண்ணுக்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,08,966 அழைப்புகள் வந்திருப்பதாக உதவி மையம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு எண்ணின் அழைப்புகளில் பெறப்பட்ட புகார்கள் குறித்து உடனடியாக விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பலன் பெற்றுள்ளதாகவும், உதவி மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “குறிப்பாக ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் என்ற நகரில் 2 மற்றும் 8 வயதான இரண்டு குழந்தைகளை தந்தை முறைப்படி சரியாக கவனிக்காததால், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை ஆதாரங்களை பெற முடியாமல் அந்தகுழந்தைகள் சிரமப்படுவதாக எங்களுக்குப் புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த 2 குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு, அவர்களது தாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அந்தத் தாயார், அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்கிறாரா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருகிறோம். இது தவிர, குழந்தைகளுடைய தந்தையின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.