Categories
தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம்” “மோடி வாழ்க” கூற மறுப்பு… ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என்று கூற மறுப்பு தெரிவித்ததால் இரு நபர்கள் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். அந்த இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபற்றி சிகார் சதார் காவல் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறுகையில்,” சிகார் நகரை சேர்ந்த கஃபார் அகமது கச்சாவா(52) என்ற ஆட்டோ ஓட்டுநர், சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அருகே உள்ள கிராமத்திற்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயத்தில் இரு நபர்கள் கஃபாரின் ஆட்டோவை வழிமறித்து புகையிலை கேட்டிருக்கின்றனர். கஃபார் தன்னிடமிருந்த புகையிலையை அந்த நபர்களிடம் கொடுத்திருக்கிறார். அதனை வாங்க மறுப்பு கூறி இருவரும், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் கஃபார் அதனை கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த இரு நபர்களும் அவரை பலமாக தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் கஃபார் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பியுள்ளார். இருந்தாலும் அந்த இரு நபர்களும் வாகனத்தின் மூலமாக காஃபாரை துரத்தி வந்துள்ளனர். அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இருந்தாலும் அவர் அதனைக் கூற மறுத்ததால் அவரின் தாடியை பிடித்து இழுத்து பலமாக தாக்கியுள்ளனர். அதனால் ஆட்டோ ஓட்டுனரின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது.மேலும் அவரின் முன் பற்கள் உடைந்து கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து கைக்கடிகாரம் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அந்த இரு நபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் சிகார் சதார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி அந்த இரு நபர்களையும் கைது செய்திருக்கிறோம். அந்த நபர்களின் பெயர் ஷம்பு தயால்(35) ராஜேந்திர ஜாட் (33) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அந்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் குடி போதையில் ஆட்டோ ஓட்டுனரிடம் இவ்வாறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்த ஆட்டோ ஓட்டுநரின் பணத்தையும், கை கடிகாரத்தையும் கைப்பற்றி உள்ளோம். தற்போது அந்த இரு நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறோம்” என்று காவல் அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறியுள்ளார்.

Categories

Tech |