பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வியும் கற்றுக்கொடுக்கும் பழங்குடி இளைஞரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி கற்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்ற நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டிவி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை இல்லாததால் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த வருடத்தின் பள்ளிக் கல்வி எட்டாக்கனியாக மாறி விட்டது. அதே சமயத்தில் இந்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருவதால் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க இயலவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் டிப்ளமோ இறுதி ஆண்டு பயிலும் மாணவர் கனகசபாபதி அப்பகுதியில் இருக்கின்ற ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன் வீட்டில் இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார். மேலும் அங்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கின்ற அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு மாணவர்களுக்கு அங்கேயே மதிய உணவு தயார் செய்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இதுபற்றி கனகசபாபதி கூறும்போது, “மலைவாழ் மாணவர்கள் நன்கு படித்து, அரசு பொறுப்புகளில் பணி அமர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்” என்று கூறியுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சில மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்து பொருளாதார பிரச்சனையால் தங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் கனகசபாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.