Categories
தேசிய செய்திகள்

தந்தை மகள்களின் பாசப் போராட்டம்… மூன்று பேரும் ஒரேநாளில் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆந்திர மாநிலத்தில் தந்தை மற்றும் இரு மகள்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் பகுதியில் பாபு ரெட்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஸ்வேதா (26), மற்றும் சாயி (20) என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தனது இரு மகள்களையும் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரின் முதல் மகள் ஸ்வேதாவிற்கு திருமணமாகிய நிலையில், அவர் தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஸ்வேதா வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. அவருடைய கணவர் சுரேஷ்குமார் ரெட்டி தினமும் அடித்து ஸ்வேதாவை கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதனால் தன் மகள் அனுபவிக்கின்ற துன்பங்களை மனரீதியாக தாங்கிக் கொள்ள முடியாத பாபு ரெட்டி தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முடிவு செய்துள்ளார்.தன் மரணத்திற்கு மருமகன் சுரேஷ்குமார் தான் காரணம் என்று கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகள்கள் இருவரும் பதறிப் போயினர். தங்கள் மீது தந்தை வைத்திருந்த அளவுகடந்த பாசத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று எண்ணி, இருவரும் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமான மருமகன் சுரேஷ்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையும் மகளும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தால் ஒரே நாளில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |