திமுக தேர்தல் வேலைகளை துவங்க கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை அரசு நீக்காமல் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து என்பவர், ஆட்டோவிற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எஃப்சி செய்வதில் நீண்ட காலம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த நிலையில், தனது ஆட்டோவை கொளுத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெகுவாக பரவி வந்தது. அந்தச் செய்தியை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து புதிய ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக காசோலையை வழங்கியுள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இ-பாஸ் முறையில் முறைகேடுகள் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும்” கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “நான் கூட இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்று வந்ததாக பலர் கூறி வருகின்றனர். அப்படி நான் சென்றிருந்தால் என் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி என் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், வழக்கு தொடர்ந்து இ-பாஸ் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிவர செய்யட்டும். நாங்கள் தேர்தல் வேலைகளை துவங்க கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் இருக்கின்றனர்” என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.