இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவருகிறார்.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு என்ட்ரீ கொடுக்கவுள்ள தோனியை காண அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தோனியின் ஓய்வு முடிவு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனியின் ஓய்வு குறித்தும், அவர் தம்மிடம் கூறியது குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், ”விராட் கோலியின் திருமணத்தின்போது, நான் தோனியுடன் சிறிது உரையாடினேன். அவர் என்னிடம், ‘நான் அணியின் வேகமான வீரரை இந்த வயதிலும் வீழ்த்துகிறேன். இதன்மூலம் நான் இன்னும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன் என்பது புரிகிறது. இதனால் நான் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடுவதற்கு முழு தகுதியுடன் உள்ளேன். ஒருவேளை என்னைவிட அணியில் வேகமான வீரர் உருவானால் அதன்பின் எனது ஓய்வு குறித்து ஆலோசிக்கிறேன்’ என்று என்னிடம் தெரிவித்தார்.
மேலும், சச்சின், தோனி போன்ற வீரர்களின் திறன் மீது எப்போதும் சந்தேகம் என்பது எழுந்ததில்லை. ஆனால், பொதுமேடையில் அவர்களின் திறனை நாம் எவ்வாறு கணிக்க இயலும். மேலும், ஐபிஎல் தொடரில் அவரின் வருகைக்காக இன்றும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதனால் என்னை பொறுத்தவரையில் இந்த ஐபிஎல் தொடரில் தோனி மீண்டும் தனது திறனை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். தோனியின் திறனும், வழிநடத்தும் ஆளுமையும் அவரை என்றும் குறைத்து மதிப்பிட அனுமதியளிக்காது’ என்று தெரிவித்துள்ளார்.