இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், “நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, இந்தியாவின் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் மக்களை கனவு காணச் செய்தார். ஆனால் அது விரைவில் தலைகீழாக மாறியது. இந்தியாவில் 14 கோடி பேருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக வேலையில்லாமல் போனது.
இது ஏன் நடந்தது? பணமாக்குதல், ஜிஎஸ்டி வரி விதிப்பு, திட்டமிடப்படாத ஊரடங்கு என இந்த மூன்று செயல்களின் மூலமாக இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை மத்திய அரசு அழித்தது. இப்போது உண்மை என்னவென்றால், இந்திய அரசால் தனது சொந்த நாட்டின் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் ஒரே கோரிக்கை ‘மோடி அரசு, வேலை கொடு’ என்பதாகவே உள்ளது.
நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களின் குரலாக ஒலிப்பதை நோக்கமாகக் கொண்டு காங்கிரஸின் இளைஞர் பிரிவு ‘வேலைவாய்ப்பை வழங்கு’ என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது. இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என கோரினார்.
இது தொடர்பாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி மக்களுக்கு வேலை உறுதி அளித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதன்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் 12 கோடி மக்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம், வளர்ச்சிக்கொள்கை போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் தற்போது 30 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துக்கொண்டே வருகிறது. தேசத்தின் எதிர்காலமாக விளங்கும் இளைய தலைமுறையினர் மீதான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அக்கறையின்மை, அலட்சியத்தால் 12 கோடி பேர் நாடு முழுவதும் இதுவரை வேலைவாய்ப்பை இழந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை சீர்செய்ய பல்வேறு அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில்வே மற்றும் பிற அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது நிறுத்த வேண்டும். வேலையற்ற இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நாடு முழுவதும் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்த உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.