கோவையில் போலுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் போலுவம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நடக்க முடியாமலும், உணவு உட்கொள்ள முடியாமலும் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது வரை 15 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள். யானைக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை யானையின் உடல் நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.