கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அனைவரும் நடுங்குகின்றனர். சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் அடைகாக்கும் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக வைரஸின் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது வைரஸின் அடைகாக்கும் காலம் 8 நாட்கள் வரை நீடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அடைகாக்கும் காலம் என்பது கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளை காட்டத் தொடங்கும் காலமாகும். மிக குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளையும், குறைந்த அளவிலான தரவுகளையும், பாதிப்படைந்தவர்களின் சுய அறிக்கைகள் அடிப்படையிலும் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து என கூறப்பட்டு வந்ததாக பீஜிங் சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சோங் யூ உள்ளிட்டவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது அவர்கள் நடத்தியுள்ள ஆய்வில், அடைக்காக்கும் காலங்களை மதிப்பிடுவதற்காக குறைந்த செலவிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். இந்த அணுகுமுறையின் அடிப்படையில், 1084 கொரோனா நோயாளிகளை ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த நோயாளிகள் அனைவரும் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றிய வுகான் நகருடன் பயண தொடர்பில் இருந்தவர்கள். அவர்களின் சராசரி அடைகாக்கும் காலம் என்பது 7.75 நாட்கள். 10 சதவீத நோயாளிகள் அடைகாக்கும் காலம் 14.28 நாட்கள் என கண்டறிந்துள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நிலையாகக் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு இந்த தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இருந்தாலும் இந்த அணுகுமுறை பல அனுமானங்களை நம்பி உள்ளதாகவும், வைரஸ் மாற்றமடைந்துள்ள உலகின் பல்வேறு நிகழ்வுகளுக்கு இது எவ்விதத்திலும் பொருந்தாது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.