கர்நாடகாவில் தொழில் செய்வதற்கு பணம் தராததால் மகனே தந்தையை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள எம்.வி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (52) என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். அவர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூத்த மகன் ராஜேஷ்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று துணை போலீஸ் கமிஷனர் எஸ்.டி.சரனப்பா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “ராஜேஷ் குமார் தனது தந்தையை கொலை செய்வதற்காக கூட்டாளிகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
பன்னீர்செல்வம் கோயிலுக்குத் செல்கின்ற வழியில் ராஜேஷ் தலைமையிலான கும்பல் அவரை கடத்தியுள்ளனர். அதன் பிறகு அவரின் உடலில் விஷம் செலுத்தி கொலை செய்து, புறநகரில் உள்ள வேம்கல் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பன்னீர் செல்வத்தின் உடலை வீசியுள்ளனர். ராஜேஷ் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்காக தனது தந்தையிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அதே சமயத்தில் தனது தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்” என அவர் கூறியுள்ளார்.