டெல்லியில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முகநூலில் பதிவிட்டிருந்த நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
முகநூலில் 27 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த முகநூல் ஊழியர்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், உடனடியாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நபர் பற்றிய தகவல்களை முகநூல் ஊழியர், டெல்லி காவல் துறையினரிடம் சனிக்கிழமை இரவு அளித்துள்ளார். அப்போதிலிருந்து அந்த நபரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அந்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் கிழக்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் என்பதை கண்டறிந்தனர். உடனடியாக அந்தப் பெண்ணின் விலாசத்திற்கு சென்றபோது அவர் அங்கு நலமாக இருந்தார் .அப்போது காவல்துறையினரின் விசாரணையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணின் கணவர் தான் அந்த முகநூல் பக்கத்தை இயக்கி வருவதாகவும், அவர் தன்னிடம் சண்டை போட்டுவிட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பையை விட்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக மும்பை காவல் துறையினருக்கு இரவு 11 மணிக்கு தகவல் அளித்தனர். இந்த நபர் எங்கு தங்கியுள்ளார் என்பதை கண்டறிவதில் பெரிய சிக்கல் உண்டாக்கியது. உடனடியாக மும்பை காவல்துறையினர் அந்த நபரின் தாயை தொடர்பு கொண்டு, மகனை வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்தத் தொடர்பை அவர் துண்டித்து விட்டார். பின்னர் வேறு ஒரு எண்ணிலிருந்து தாயை அழைத்து பேசியுள்ளார்.
அச்சமயத்தில் அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை காவல்துறையினர் அறிந்தனர். பின்னர் உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட காவல்துறையினர் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் தொலைபேசியில் பேசியவாறே அவர் இருக்கும் முகவரிக்கு சென்றடைந்தனர். அதன்பிறகு அந்த நபரின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு சிறிய உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து பணமில்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார். புதிதாக பிறந்துள்ள குழந்தையை எவ்வாறு வளர்க்கப் போகிறோம் என்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.