புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்த ஆலோசனையை இன்று ஐ.சி.சி மேற்கொண்டது.
இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றிய பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகினார். இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐ.சி.சி யின் கோல்டு நிர்வாகிகள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி யின் புது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைமுறைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யதுள்ளனர்.
நான்கு வாரத்திற்குள் வேட்புமனு தாக்கல், தலைவர் தேர்தல் உள்ளிட்ட பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் காலின் கிராவ்ஸ் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் டேவ் கேமரூன், இடைக்கால தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோரின் பெயர்கள் ஐ.சி.சி புதிய தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அவரை தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்து இதுவரை கிரிக்கெட் வாரியம் எதுவும் தெரிவிக்கவில்லை. தலைவர் பதவியைப் பிடிக்க 17 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.சி.சி யில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.