இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக குமுரி கொண்டிருந்த எரிமலை இன்று வெடித்ததில் 16,400 அடி உயரத்திற்கு மேல் சாம்பல் துகள்கள் பறந்தது.
இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான மற்றும் எந்த ஒரு நேரத்திலும் வெடிக்கக் கூடிய வகையில் 120 எரிமலைகள் இருக்கின்றன. அதில் சினாபங் என்ற எரிமலை வெடித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்த எரிமலை சில நாட்களாகவே குலுங்கிக் கொண்டிருந்தது. அதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிக்குழம்பு வெளிப்படலாம் என்பதால், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த 30 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எரிமலை இன்று காலை திடீரென வெடித்து எரி குழம்பை கக்கியுள்ளது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு மேல் பறந்தன. மேலும் சாம்பல் துகள்கள் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த எரிமலை வெடிப்பில் எந்தவிதமான உயிர்ச் சேதங்களும், காயங்களும் ஏற்படவில்லை என இந்தோனேசியாவில் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.