பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்தில் இரு சகோதரிகள் செய்துவரும் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரும்பொறை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாட்சிமை என்ற 18 வயது மகளும் உவகை என்ற 17 வயது மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாட்சிமை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உவமை பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார்.
இரு சகோதரிகளும் அவர்களது விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தந்தையுடன் இணைந்து விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தந்தைக்கு சொந்தமான தோட்டம் அருகே இருக்கும் பனை மரங்களில் இருந்து விழும் பனம்பழங்களை சேகரித்து வருகின்றனர். அந்த நிலையில் இதுவரை 1000க்கும் மேலான பனம் பழங்களை இவர்கள் சேகரித்துள்ளனர்.இதுபற்றி அவர்கள் கூறும் பொழுது, “எங்களுக்கு இயற்கை, விவசாயம், மரங்கள் வளர்ப்பு, இவற்றின் மீது ஆர்வம் அதிகம். அதனால்தான் எங்கள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் விதத்தில் பனை விதைகளை சேகரித்து வருகிறோம்.
இதுபற்றி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தோம். அதனை பார்த்து பலரும் தங்களுக்கு பனை விதைகள் வேண்டுமென்று கேட்டு வருகின்றனர். இப்பொழுது வரை 11,000 பனை விதைகளை அவர்கள் கேட்டுள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 3000 பனை விதைகளை நடவு செய்ய கேட்டுள்ளனர். இதுவரை சுமார் 1000 விதைகளை நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க தொடர்ந்து பனை விதைகளை சேகரித்து வருகிறோம். இதுபோல மற்ற மாணவர்களும் விதைகளை சேகரித்து நடவு செய்தால் நிலத்தடிநீரை நம்மால் காப்பாற்ற முடியும்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த இரு சகோதரிகளின் நற்பணிக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.