போலியான வாழ்க்கையை நம்பி நிஜ வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிஜ வாழ்க்கையில் உண்மையான அன்பு பாசத்துடன் நமது தாய், தந்தை, மனைவி, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் உள்ளிட்ட உறவுகள் நம்மை பார்த்துக் கொண்டாலும், நாம் ஏனோ பொய்யான உலகை தேடி தான் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். இதனால் பலர் பல விளைவுகளை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களது அடையாளத்தை இழந்து நடுரோட்டில் நிற்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது
இதுகுறித்து குமரி மாவட்ட காவல் துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தில் போலியான உறவுக்காக இல்லத்தில் இருக்கும் உண்மையான உறவுகளை இழக்காதீர்கள். உங்கள் முகவரியை இழந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இணையதளத்தில் முகம் காட்ட மறுத்து பேசும் யாவரும் உங்களது உள்ளத்தை பார்ப்பதில்லை.
உங்களுக்கு பின்னால் இருக்கும் வசதி வாய்ப்பையும், பணத்தையும் மட்டுமே பார்த்துப் பழகுகிறார்கள். எனவே போலியான வாழ்க்கையைத் தேடி நிஜ வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்ட காவல்துறையினர், இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டு லட்சிய பாதையை நோக்கிய பயணம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.