தவறான தகவல்களை கொடுத்துவிட்டு தலைமறைவானவர்களில் 3,300 பேரை சுகாதாரத்துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், அங்கு தினசரி 2,000 க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரிசோதனை எடுக்கப்படும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் எண், போன்றவற்றை மாநகராட்சியிடம் கொடுத்து வந்தனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளான 4,327 பேர் கடந்த 7ம் தேதி வரை சுகாதாரத்துறையின் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். இந்த மறைமுகமான கொரோனா நோயாளிகளால் மற்ற மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. பலர் தவறான முகவரியை கொடுத்து இருந்ததால் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாலும் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு வராமல் இருந்தனர்.
இதையடுத்து தலைமறைவாக உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரம் காட்டி வந்தனர். குறிப்பாக காவல்துறை உதவியுடன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தவர்கள், தவறான முகவரி கொடுத்து விட்டு சுற்றி திரிந்தவர்களை பிடிக்க நடவடிக்கைகளையும் எடுத்து வந்தனர். அதற்கான முயற்சியில் மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர் வெற்றியும் பெற்றனர். அதாவது தலைமறைவாக இருந்த 4,327 பேரில் 3,300 பேரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களில் சிலர் மருத்துவமனையிலும் பலர் கொரோனா மையத்திலும் மேலும் சிலர் வீட்டு தனிமையிலும் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.