உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமாகியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தென்மேற்கு பருவமழை அசாம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது பீகார், அஸாம் மாநிலங்களில் ஓரளவிற்கு மழை குறைந்து வருகிறது.
உத்தரகாண்டில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சமோளி மாவட்டத்தின் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல கடைகள் சேதம் ஆகிவிட்டன. மேலும் அங்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.