வெள்ளை மாளிகைக்கு வெளியே சுற்றித் திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிபர் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லம் என்பதால் எப்போதும் வெள்ளை மாளிகையை சுற்றிலும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறார். அதனை அறிந்த சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த மர்மநபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின்போது துப்பாக்கிச் சூடு நடந்ததால் உடனடியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு நபரைத் தவிர வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை.அந்த மர்ம நபர் ஆயுதங்களுடன் வந்திருந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.