அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் தீவிரம் அடையாமல் இருப்பதற்காக ஜனாதிபதி டிரம்ப் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியுள்ளது. பிரேசில் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 மில்லியனுக்கும் மேலானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7,34,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டிற்குச் சென்று நாடு திரும்பும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விதிமுறையானது கொரோனா அல்லது பிற நோய்களால் பாதிப்படைந்துள்ள நபர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் அமெரிக்க அதிபர் பல்வேறு குடியேற்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். சில சட்டபூர்வமான குடியேற்றங்களை இடைநிறுத்தி மற்றும் எல்லையில் பிடிபட்ட புலம்பெயர்ந்தோரை சட்ட நடைமுறைகள் இல்லாமல் உடனடியாக நாடு கடத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.