நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் பேருதவியாக இருந்ததால், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக இளைஞர்கள் கருதப்பட்டனர். வளர்ச்சி சமத்துவத்தை பரவலாக்குவதற்கான செயல்களில் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் நிகழ்காலத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் வளர்ச்சி பங்காளிகளாக செயல்படுகின்றனர். அறிவு, அர்ப்பணிப்பு, ஆற்றல், துணிவு ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாக உருவாகியுள்ளனர்.
உலக நாடுகளில் சில நாடுகள் மட்டுமே மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு இளைஞர்களை வரப்பிரசாதமாக பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது இளைஞர்களின் ஈடுபாடும், உறுதிமிக்க பங்களிப்பாகும். இளைஞர்களின் ஈடு இணையற்ற நேரடியான மற்றும் மறைமுக பங்களிப்பால் நவீன இந்தியா சவால்களையும், செயல்களையும் எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டறிந்து சமூக மற்றும் பொருளாதார தளத்தில் வளமான பாதையில் பயணித்து வருகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இளைஞர்கள் பன்முகத்திறன் கொண்டு அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஒரு காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளாத நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை மாறி எந்த ஒரு நாடு இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்த தவறுகிறதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகின்றார்களோ அதுவே பின்தங்கிய நாடாக கருதப்படுகிறது.