ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது.
ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். சைனாவும் தன்னுடைய முயற்சிகளை ஒருபக்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அனைவரையும் முந்தி ரஷ்யா உலகத்திலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்த தடுப்பூசியை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டுமா ? அல்லது தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் முடிவடைந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டுமா ? என்று பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழு நாளை ஆலோசனை நடத்தும் என சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே சோதனைகள் முடிந்து தடுப்பூசிகள் பயன்படுத்திக் கொள்ளலாமா ? அல்லது வேறு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா ? என்பதை இந்த குழு பரிசீலனை செய்யும் என்று முடிவாகியுள்ளது.