எந்த மொழியும் எந்த ஒரு மாநிலத்தில் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பல்வேறு ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதனை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையை பற்றி ஆராய்வதற்கு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றி ஆராய்வதற்கு இந்த குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புதிய கல்விக் கொள்கை பற்றி கோரிக்கை மனுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் டி.ஆர்.பாலு என்னிடம் வழங்கியுள்ளார். அவரிடம் எந்த மொழியும் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று நான் விளக்கம் கூறினேன். அதே சமயத்தில் டி.ஆர்.பாலுவிடம், பயின்று மொழியை தேர்வு செய்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்றும் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் பற்றியும் அவரிடம் தெளிவாக விளக்கினேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சார்பாக T.R பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன். pic.twitter.com/KR93takYEN
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 11, 2020