மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பம் தன்னை வந்து அழைத்துச் செல்லும் என நாயொன்று காத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் இருக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. அங்கு தமிழகத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வந்தனர். அதனால் அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது.
இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைந்தனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் மட்டுமே மண்ணுக்கு அடியில் இருந்து மீட்க பட்டிருக்கும் நிலையில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அளவு மண்ணால் மூடப்பட்டதால் ஏராளமான உயிர்பலி ஏற்பட்டு இருக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் நாய் ஒன்று தன்னை வளர்த்த குடும்பம் மண்ணுக்குள் புதைந்தது அறியாமல் அவர்கள் வந்து தன்னை அழைத்து செல்வார்கள் என ஒரு இடத்தில் காத்திருக்கிறது. அங்கிருந்தவர்கள் அந்த நாயை விரட்டியும் அது அந்த இடத்தை விட்டு நகராமல் தனது குடும்பத்திற்காக காத்திருக்கின்றது. அதன் புகைப்படம் சமூக வளைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.