Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பதிவால் வன்முறை… 2 பேர் பலி… 60 பேர் காயம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொகுதி எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சொந்தக்காரர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை சுற்றி போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏவின் சொந்தக்காரர் நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் முழக்கமிட்டவர்கள் திடீரென்று எம்.எல்.ஏவின் வீடு மீதும் கற்களை வீச தொடங்கினர். மேலும்  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு வன்முறை வெடித்தது.

இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். ஆனாலும், வன்முறை கட்டுக்குள் வராததால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த வன்முறையில் 60-க்கும் மேலானோர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவின்  சொந்தக்காரர் நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர கமிஷனர் தெரிவித்துள்ளார். வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி  மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக 110க்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |