புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அண்ணா, பெரியார், எம்ஜிஆர், தீரர், சத்தியமூர்த்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு பிரம்மாண்ட பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிலைகளில் சாயம் பூசவோ, சேதப்படுத்வோ முடியாத அளவிற்கு பிரமாண்டமான கூண்டு அமைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் அம்பேத்கர் சிலை, அண்ணா சிலையில் ராட்சச கூண்டுகள் வைத்து அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மேல் ஏறி நின்று அதிக அளவில் கூட்டமாக மாலை அணிவிப்பது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.