சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெருநிறுவனங்கள் தொடங்குவது பற்றி சட்ட வரைவு அறிக்கையில் புதிய மாற்றங்கள் செய்து, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற வரைவின் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையின் மீது மக்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்றும் அப்போதுதான் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சரியாக கூற முடியும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், ஜூன் 30ஆம் தேதிக்குள் 22 மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அதற்கான கால அவகாசமும் கேட்கப்படவில்லை. அதனால், டோங்கட் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்பாக வருகின்ற 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.