தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி கருத்து அதிமுக கூட்டணியில் சர்ச்சையை பற்றவைத்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து அரசியல் விவாதங்கள் திரும்பியுள்ளதால் அரசியல் களத்தில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது எனலாம். சென்னையில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை கடந்த வாரம் வரை இருந்தது. கு.க.செல்வம் சேர்ந்த பிறகு பாஜக Vs திமுக என்று நிலைமை மாறியுள்ளது.வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “எங்களை யார் அணுசரித்துச் செல்கிறார்களோ, நாங்கள் யாரை ஆதரிக்கிறோமோ அந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லும்.
பாஜக தேசிய கட்சி என்பதால் நாங்கள்தான் கூட்டணிக்கு தலைமை வகிப்போம்” என்று பதிலளித்தார்.எடப்பாடி முதல்வர் வேட்பாளர்: ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன தெரியுமா?அதிமுகவில் ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் கூட்டணி குறித்தும் அடுத்த விவாதம் எழுந்துள்ளது. “அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. 2021ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் நிச்சயம் இருப்பார்கள்” என பாஜக மாநில தலைவர் முருகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மறைமுகமாக அதிமுகவுக்கு எதிராக அமைந்துள்ள வி.பி.துரைசாமியின் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற பாஜக தலைமையின் எண்ணத்தை வி.பி.துரைசாமி வெளிப்படுத்துகிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.ஆனால் அதிமுக தரப்பில் இதை பெரியளவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை ஜெயக்குமாரின் பேட்டி காட்டுகிறது. இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், “பாஜகவின் தலைவர் முருகன் தானே, அவர் கூறினால்தான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். ஒருவேளை பாஜக அவ்வாறு கூறினால் எங்கள் கட்சி அது குறித்து முடிவெடுக்கும்” என்றார்.