Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் சந்தேகம்… ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜெர்மனி…!!!

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை என்ற ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி புதின் நேற்று அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிதின் மற்றும் பிற அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவில் நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போட தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இறுதிக்கட்ட  சோதனைகள் முடிவடைவதற்கு முன்னரே ‘ஸ்பூட்னிக் வி’ என்று அழைக்கப்படும் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள ரஷ்யாவின் முடிவு சில நிபுணர்களுக்கு கவலையை அளித்துள்ளது. சோதனை முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே பில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போட தொடங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான்கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “தடுப்பூசி தவறாகப் போனால் அது உயிர்களை கொல்ல நேரிடும்.அதனால் ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் மிகவும் சந்தேகம் கொள்கிறேன்.

நோய்த் தொற்றுகளின் போது, சரியான ஆய்வுகள் மட்டும் சோதனைகளை செய்வதும், மக்கள் மத்தியில் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு சோதனை முடிவுகளை பொதுவில் வெளியிடுவதும் மிக அவசியம். ஆனால் ரஸ்யர்கள் தடுப்பூசி பற்றி எத்தகைய போதுமான தகவல்களையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே அந்த தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை. எப்படியாவது கொரோனா தடுப்பூசி கண்டறிந்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை செய்வது முக்கியமில்லை. மக்களுக்கு ஒரு பயனுள்ள, பரிசோதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி கண்டறிவது தான் மிக முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |