அதிமுகவின் அடுத்த முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காசிமேட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ” அதிமுகவின் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் குறித்த முடிவை கட்சி சரியான நேரத்தில் எடுக்கும். ஆனால் முதல்வர் வேட்பாளர் பற்றி பொது இடங்களில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாக அமையும். என்றும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என கூறிய ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து கிடையாது. மேலும் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
பாஜக தலைமையிலான கூட்டணி என்ற கருத்தை அதன் மாநில தலைவர் முருகன் கூறவில்லை. அவ்வாறு அவர் கூறினால் அதற்கான சரியான பதிலை அதிமுக கூட்டணி அறிவிக்கும். மேலும் அதிமுக அரசு ஒரு பெரிய ஆலமரம் போன்றது. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்த மரம் என்றும் அழியாது. எஸ் வி சேகர் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம். எஸ் வி சேகர் முதல்வரை அவதூறாக பேசி தேசியக்கொடியை அவமதித்தது ஏற்கமுடியாத ஒன்று” இவ்வாறு அவர் கூறினார்.