கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை அம்மாநிலத்தின் முதல்-மந்திரி பிரனாய் விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு செய்கின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
5 நாட்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று நடந்து கொண்டிருக்கும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதனால், மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
மூணாறு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலையின் பெட்டிமுடி பகுதியை கேரள மாநில முதல்-மந்திரி பிரனாய் விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது இருவரும் இணைந்து நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தகவல் அளித்துள்ளது.