கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெயரை கூறாமல் உதவிய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
கேரளாவில் தற்போதைய சூழலில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு, வெள்ளம் போன்றவை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு மழையினால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மேரி என்ற பெண் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்துள்ளார். கணவர் வேலையை இழந்த நிலையில் மேரி 15 நாட்கள் மட்டுமே வேலைக்கு போய் உள்ளார்.
அதில் கிடைத்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க நினைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொட்டலங்கள் யாருக்கும் தெரியாமல் பணத்தை வைத்து அனுப்பியுள்ளார். தனது வீட்டில் தயார் செய்யும் உணவில் மட்டுமல்லாது பல பகுதிகளுக்கு சென்று உணவுப் பொட்டலங்களை சேகரித்து அதிலும் பணத்தை வைத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து மேரி கூறியபோது “என்னால் முடிந்த சிறிய உதவியை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய நினைத்தேன்.
அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இருக்கின்றது. தற்போது இங்கு அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதனால் பலரும் டீ குடிக்க நினைப்பார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் அனுப்பிய பணம் டீ குடிக்கவாவது உபயோகப்படும் என்றே நினைக்கிறேன். நான் செய்யும் செயல் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அனைவருக்கும் இப்போது தெரிந்து விட்டது” எனக் கூறினார் அவரது இத்தகைய மனிதாபிமானமிக்க செயலை பாராட்டி பல்வேறு தரப்பினரும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.