இலங்கையில் புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்ற நிலையில் ராஜபக்சே குடும்பத்தில் நான்கு பேர் மந்திரியாகியுள்ளனர்.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்துள்ளார்.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றி கண்டது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.பின்னர் மகிந்த ராஜபக்சே கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று 28 கேபினேட் மற்றும் 40 ராஜாங்க மந்திரிகளை நியமித்துள்ளார்.
புதிய மந்திரி சபையில் பதவியேற்பு விழா நேற்று கண்டி நகரில் சிறப்பாக நடந்தது. அதிபர் ராஜபக்சே புதிய மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கின்றனர். ராஜபக்சே நிதி, மத விவகாரம், கலாச்சார அலுவலகங்கள், நகர அபிவிருத்தி போன்ற இடங்களின் பொறுப்பை தன் வசம் வைத்துள்ளார். கோத்தாபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சே நீர்ப்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரியாக பதவி ஏற்றிருக்கிறார். அவருடைய மகன் ஷாசீந்திர ராஜபக்சேவுக்கு உயர் தொழில்நுட்ப துறை மந்திரி பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
மகிந்தா ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.முதன் முதலாக 2010 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது முதன் முதலாக மந்திரி ஆகியுள்ளார். ஜி.எல்.பெரீஸ் கல்வி மந்திரியாகவும், தினேஷ் குணவர்த்தனே வெளிநாட்டு மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ளனர். இராணுவ இலாகா தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் பொறுப்பில் இருக்கின்றன. மந்திரிசபையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
அவர்களில் கேபினட் மந்திரி களான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் துறையும், அலி சப்ரிக்கு நீதியில் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது. ராஜாங்க மந்திரி களான சதாசிவம் வியாழேந்திரன் தபால் சேவையும், வெகுஜன ஊடகங்கள் அபிவிருத்தி இலாகாவும், ஜீவன் தொண்டமானுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.