பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது ஆஞ்சநேயர் கோவிலை, முஸ்லிம் வாலிபர்கள் மனித சங்கிலி அமைத்து பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மை சமுதாயம் பற்றி அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறான கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சிறுபான்மை சமுதாயத்தினர் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு உள்பட 3 பேரின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அதுமட்டுமின்று நவீனை கைது செய்யகோரி டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தின் முன்பு சிறுபான்மை சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி காவல்நிலையத்தை சூறையாடினர். அதன் பிறகு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறைக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தினர். கூட்டத்தை கலைப்பதற்காக கவத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டி.ஜே.ஹள்ளி அருகே சாம்புரா மெயின் ரோட்டில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்தும், வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக சாம்புரா பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் வாலிபர்களுக்கு தெரியவந்ததுள்ளது. அதனால் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர். மேலும் வன்முறையாளர்கள் கோவிலுக்குள் புகுந்து விடாத வகையில் முஸ்லிம் வாலிபர்கள் கோவிலின் முன்பு மனித சங்கிலி அமைத்து கோவிலை பாதுகாத்து நின்றனர்கள்.
ஒருபுறம் சிறுபான்மை சமுதாயத்தினர் வன்முறையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் , மற்றொரு பக்கம் முஸ்லிம் வாலிபர்கள் கோவிலை பாதுகாக்க மனித சங்கலி அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கின்றன. இந்த வீடியோக்களை கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் முஸ்லிம் வாலிபர்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.