வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொரோனா காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இன்னும் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவரின் அழைப்பை ஏற்ற அந்த கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் இறங்கினர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமித் பைகுல் கூறுகையில்,”கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். மாநிலத்தில் 80 சதவீத மக்கள் வேலையின்மை மற்றும் பட்டினியினால் வாடி கொண்டிருக்கின்றனர். பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை சரி செய்து பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.