5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாரான் மாவட்டத்தின் சாகாபாத் பகுதியில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகஸ்ட் 11ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியைத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார்.
இதனையடுத்து, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.