மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில் அறிமுகமான 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செயலியை தடை செய்து ஒரு மாதத்தை கடந்த போதிலும் அதன் தாக்கம் இன்னமும் விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. ஆம், மயிலாடுதுறை அருகே 16 வயதுடைய சிறுமி ஒருவர் டிக் டாக்கில் பாடுவது, நடனம் ஆடுவது என ஆக்டிவாக இருந்துள்ளார்.. அதிலேயே எப்போதும் மூழ்கி இருந்த நிலையில், தன்னை புகழ்ந்து பாராட்டி வரும் கமெண்ட்டுகளுக்கு ஆர்வமாக பதிலளித்தும் வந்துள்ளார்.
அப்படி சிறுமியை புகழ்ந்து அறிமுகமானவர் தான் அரக்கோணத்தை அடுத்துள்ள பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற இளைஞர். இன்பாக்ஸ் மூலம் ஆசையாக பேசி சிறுமியிடம் நெருங்கிய நட்பை வளர்த்த சஞ்சீவ், உயிருக்கு உயிராக உன்னை காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தையும் கூறியுள்ளார்.
அதில் மயங்கிப்போன அந்த சிறுமி சஞ்சீவிடம் நெருக்கம் காட்டியுள்ளார். இதனை யன்படுத்தி சிறுமியின் வீட்டு முகவரியை பெற்று கடந்த 6ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தின் போது தனது நண்பர்களின் உதவியுடன் அவரை கடத்திச் சென்றுள்ளார் சஞ்சீவ்.. இதையடுத்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.. புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் செல்போன் பதிவுகளை வைத்து அவரை பத்திரமாக மீட்டதுடன், சஞ்சயை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில்அடைத்தனர்.. மேலும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.