நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிவிட்டதால் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 2,000-ற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முதல் மழை குறைந்ததை அடுத்து முகாம்களில் இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர். அப்போது வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் மழை வெள்ளத்தால் சேதமடைந்து இருந்ததுடன் ஒரு சில வீடுகளில் சுவர்களும் இடிந்திருந்தன.
சில வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் தேங்கிக்கிடக்கும் மண் மற்றும் தண்ணீரை தாங்களாகவே சுத்தம் செய்து வரும் பொதுமக்கள். ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.